25 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் 25 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-08 23:00 GMT
சென்னை,

சென்னையில் நேற்று ஒரே நாளில் 399 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சென்னை மருத்துவமனைகளில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், இதில் பெரும்பாலானோருக்கு பிரசவம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களில் 25 கர்ப்பிணி பெண்களில் எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் 12 கர்ப்பிணி பெண்களும், தண்டயார்ப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 11 கர்ப்பிணி பெண்களும், திருவல்லிக்கேணி கஸ்துரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணி பெண்களும், அந்தந்த மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது. அந்த குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமடைந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை புறநகர்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தற்போது கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசு உத்தரவுப்படி கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதன்படி 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல் கிருஷ்ணா நகர், 8-வது தெருவைச் சேர்ந்த 51 வயது முதியவரும், கிழக்கு தாம்பரம், ஈஸ்வரி நகரைச் சேர்ந்த 33 வயது வாலிபர், கணபதிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த 36 வயது நபர் ஆகியோருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சிட்லபாக்கம்

செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் 3-வது தெருவில் 45 வயது நபர், அதேபோல் 40 நாட்களை கடந்து பாதிக்கப்படாமல் இருந்த சிட்லபாக்கம் பேரூராட்சியிலும் முதல் முறையாக 24 வயது வாலிபர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

கன்டோன்மென்ட் பல்லாவரம் பகுதியில் 40 வயது பெண்ணுக்கும், பம்மல் பகுதியில் 52 வயது ஆண் மற்றும் 23 வயது பெண்ணுக்கும், பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை கணபதிபுரம் பகுதியில் 55 வயது பெண்ணுக்கும், கீழ்கட்டளை பகுதியில் 59 வயது ஆண் மற்றும் 55 பெண் ஒருவருக்கும் என சென்னை புறநகர் பகுதியில் கர்ப்பிணி உள்பட 12 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 184 ஆனது.

மேலும் செய்திகள்