டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-08 22:49 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்த கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த கடை திறக்கப்பட்டது. அப்போது மதுபாட்டில்கள் வாங்க, நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா வைரஸ் தங்கள் பகுதிக்கும் பரவி விடுமோ என்று அச்சமடைந்தனர்.இந்நிலையில் நேற்று காலை ஊழியர்கள், டாஸ்மாக் கடையை திறக்க முயன் றனர். அப்போது அங்கு திரண்டு வந்த பழங்கூரை சேர்ந்த பெண்கள், டாஸ்மாக் கடையை திறக்கவிடமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், கடையை மூடும் அதிகாரம் கலெக்டருக்கு தான் உண்டு, அதனால் அவரிடம் புகார் தெரிவியுங்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதனை ஏற்றுக்கொண்ட பெண்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்