வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அதிகாரிகளை கண்டித்த கலெக்டர்

கள்ளக்குறிச்சியில் நடந்த வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அதிகாரிகளை கண்டித்த கலெக்டர் கிரண்குராலா, நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-08 22:59 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் வேளாண் பண்ணை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேளாண் எந்திரங்கள் வழங்குவதற்காக கலெக்டர் கிரண்குராலா வருகை தந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த கலெக்டர் கிரண்குராலா, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஏன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிற்கிறீர்கள் எனக் கேட்டு அங்கிருந்த வேளாண்மை அதிகாரிகளையும், விவசாயிகளையும் கண்டித்தார்.

வெளியேறிய கலெக்டர்

பின்னர் அவர், நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்களை வெளியே அனுப்பினர். பின்னர் வேளாண் எந்திரங்கள் பெறுவதற்காக வந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்தவர்களை மட்டும் சமூக இடைவெளியுடன் விழா நடந்த இடத்தில் அமர வைத்தனர்.

இதையடுத்து வேளாண்மை அதிகாரிகள், இனி இதுபோன்ற தவறு நடக்காறு என்று கூறி கலெக்டர் கிரண்குராலாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.

வேளாண் எந்திரங்கள்

தொடர்ந்து கலெக்டர் கிரண்குராலா, 63 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், பவர் டில்லர், சுழல் கலப்பை, நெல் நடவு எந்திரம், கதிரடிக்கும் எந்திரம் உள்ளிட்ட வேளாண் எந்திரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குனர் செல்லப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், சந்துரு, தேவி, சுப்பிரமணியன், ராஜசேகர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் வாமலை, முருகன், வேளாண்மை அலுவலர்கள் பொன்னுராசன், ஆனந்தன் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்