மதுரையில் வீட்டில் பதுக்கிய வெடிகுண்டுகள் சிக்கின

மதுரையில் வீட்டில் பதுக்கிய வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-05-08 23:40 GMT
மதுரை, 

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 28). இவர் மீது வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சம்மட்டிபுரத்தில் இரு கோஷ்டியினர் போதையில் மோதிக் கொண்டனர். இதில் ஒருதரப்பினர் மோதல் குறித்து சரத்குமாரிடம் தெரிவித்தனர். அவர் இருதரப்பினரையும் சமரசம் செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையில் தகவல் அறிந்து எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோதிக்கொண்ட இருதரப்பினரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீசாரால் தேடப்பட்டு வந்த சரத்குமார் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் சரத்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரிடம் விசாரித்த போது, நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக கூறினார். மேலும் அதனை தன்னுடைய நண்பர் நிதிஷ்குமாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு கூரை விட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து போலீசார் நேற்று சம்மட்டிபுரம் பாரதிநகரில் உள்ள அந்தகூரை வீட்டிற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் சென்றனர். அங்கு சோதனை செய்த போது ஒரு பையில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டனர். உடனே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதனை பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.

பின்னர் போலீசார் அந்த இடத்தின் உரிமையாளர் நிதிஷ்குமாரையும் பிடித்தனர். மேலும் அவர்கள் எதற்காக அந்த வெடிகுண்டுகளை அங்கு பதுக்கி வைத்திருந்தார்கள், அதற்கான பின்னணி என்ன, அவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்