மதுரை செல்லூரில் மதுக்கடையை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸ் தடியடி - 20 பேர் கைது

மதுரை செல்லூரில் மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியதுடன், 20 பேரை கைது செய்தனர்.

Update: 2020-05-09 00:03 GMT
மதுரை,

மதுரை செல்லூர் உள்ளிட்ட சில பகுதியில் பெண்கள், மாணவ-மாணவிகள் சேர்ந்து மதுக்கடைகள் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதே போன்று நேற்றும் செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் என 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எவ்வளவு கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக நேற்று மதியம் அந்த கடை மூடப்பட்டது.

மேலும் எல்லீஸ் நகர் 70 அடி சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்