காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினருடன் கைகோர்த்த இளைஞர்கள் - தீ மூட்டி காவல் காக்கின்றனர்

கூடலூர் அருகே காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினருடன் இளைஞர்கள் கைகோர்த்து உள்ளனர். அவர்கள் தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர்.

Update: 2020-05-08 22:00 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், வடவயல், ஸ்ரீமதுரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அகழிகளை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் அகழி இல்லாத பகுதி வழியாக கிராமங்களுக்குள் காட்டுயானைகள் நுழைந்து விடுகின்றன.

இதையொட்டி காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினருடன் இணைந்து மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இரவில் காவல் காத்து வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீ மூட்டி காவலில் ஈடுபடு கின்றனர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது:-

ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும், காட்டுயானைகள் நடமாட்டம் மட்டும் குறைவதே இல்லை. அகழிகளை ஆழப்படுத்தினால், அகழி இல்லாத பகுதி வழியாக ஊருக்குள் வருகின்றன. இல்லையென்றால் ஆழம் குறைவான அகழியை கடந்து ஊருக்குள் நுழைகின்றன.

வனத்துறையினரால் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இதன் காரணமாக வனத்துறையினருடன் கைகோர்த்து நாங்களும் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்