பூக்களை பறிக்க தொழிலாளர்கள் வர மறுப்பதால் குடும்பத்துடன் களத்தில் இறங்கிய விவசாயிகள்

பூக்களை பறிக்க தொழிலாளர்கள் வரமறுப்பதால் குடும்பத்துடன் தோட்டத்தில் இறங்கி விவசாயிகள் பூக்களை பறித்து வருகின்றனர்.

Update: 2020-05-09 04:41 GMT
வடகாடு, 

பூக்களை பறிக்க தொழிலாளர்கள் வரமறுப்பதால் குடும்பத்துடன் தோட்டத்தில் இறங்கி விவசாயிகள் பூக்களை பறித்து வருகின்றனர்.

பூக்கள் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், சேந்தன்குடி, பனங்குளம், மேற்பனைக்காடு போன்ற ஊர்களில் உள்ள விவசாயிகளால் அதிக பூக்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் தடைப்பட்டுள்ளதாலும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொரோனா பயத்தால் இங்கு வராததாலும் தற்போது உள்ளூர் பகுதியில் உள்ள பூக்கடைகள் மூலமாக, குறைந்த அளவே வியாபாரம் நடைபெறுகிறது.

பூ கமிஷன் வியாபாரிகளிடம் பூக்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் பூக்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பூக்கும் பூக்களை எடுக்க ஆட்களை அழைக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பூ எடுக்கும் தொழிலாளர்களுக்கு கூலிக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என்று கூறி தொழிலாளர்கள் வர மறுப்பதால் விவசாயிகள் தங்களது குழந்தைகளுடன் வந்து பூக்களை பறித்து கொடுத்து வருகின்றனர்.

இழப்பீடு

மேலும் விவசாயிகள் கூறுகையில் “பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டால் செடிகள் மரத்துப்போய் பூக்கள் பூப்பதை நிறுத்தி விடும். மேலும் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதாலும் பூக்களை பறித்து கொடுத்து வருகிறோம்” என்றனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்