ஜோலார்பேட்டை அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

ஜோலார்பேட்டை அருகே சீரானகுடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-05-09 06:21 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்துளை கிணறு அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் உடனடியாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை மேல்தெரு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு சீரமைப்பு பணிக்காக வாகனங்கள் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள காலனி பகுதியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி விட்டு பிறகு மேல் தெரு பகுதிக்கு ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும் எனவும், ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சி செயலாளர் கபிலன் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு ஆழ்துளை கிணற்றை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மேல் தெருவில் ஆழ்துளை கிணற்றை சரி செய்து விட்டு, அடுத்த படியாக இங்கு நடைபெற உள்ளது. எனவே இன்று அல்லது நாளைக்குள் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும் எனவும், அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்