சொந்த பணத்தை செலவு செய்து பஸ், வேன்களை வாடகைக்கு அமர்த்தி வெளிமாநிலத்துக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்

சொந்த பணத்தை செலவு செய்து பஸ், வேன்களை வாடகைக்கு அமர்த்தி திருப்பூரில் இருந்து வெளிமாநிலத்துக்கு தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.

Update: 2020-05-09 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றினார்கள். ஊரடங்கு காலத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உணவுப்பொருட்கள் கிடைக்காமலும், கையில் பணம் இல்லாமலும் கடும் சிரமத்தை சந்தித்தனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்களை ரெயில் மூலமாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள சில பனியன் நிறுவனம், சாயப்பட்டறைகளில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாகன அனுமதி பெற்று பஸ், வேன்களை வாடகைக்கு அமர்த்தி நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டு செல்கிறார்கள்.

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய 60 பேர் 2 பஸ்களில் பீகாருக்கு புறப்பட்டு சென்றனர். அதுபோல் நேற்று கோழிப்பண்ணை பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் இருந்து 60 பேர் 6 வேன்களில் பீகாருக்கு புறப்பட்டனர். இதுபோல் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 2 கார்களில் 9 பேர் ராஜஸ்தான் புறப்பட்டனர். வீரபாண்டி பகுதியில் இருந்து 5 வேன்களில் 50 பேர் ஒடிசா புறப்பட்டனர்.

வாகனத்துக்கான வாடகை செலவுத்தொகையை சில நிறுவனங்கள் கொடுத்துள்ளது. பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த பணத்தை கொடுத்து ஊருக்கு புறப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கொடுத்து வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதுபோல் மாநகரின் பல பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் சொந்த பணத்தை செலவு செய்து ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, இணையதளம் மூலமாக வெளிமாநிலம் செல்வதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சென்னையில் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் பேரில் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அனுமதியை பெற்று அதன் மூலமாக வடமாநில தொழிலாளர்கள் வாகனங்களில் வெளிமாநிலம் புறப்பட்டுள்ளனர். ரெயில் மூலம் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளும் தொடர்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்