கொரோனா ஊரடங்கால் விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

கொரோனா ஊரடங்கால் விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

Update: 2020-05-09 22:48 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த விடுமுறையில் மாணவ,மாணவிகள் உள்ளனர். இருந்தபோதிலும் அவர்கள் விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. ஏனெனில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

வீட்டின் மொட்டை மாடியில்...

அதுமட்டுமின்றி தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருவதால் பகல் வேளைகளில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும் மாலை வேளையில் கடற்கரையில் உலவ முடியாத அளவுக்கு கடற் கரையும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். தங்கள் நேரத்தை டி.வி. பார்ப்பதிலும், செல்போன்களில் விளையாட்டுகளை விளையாடுவதிலும் கழித்து வருகின்றனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்தோடு அமர்ந்து கேரம், செஸ், தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.

மாலை வேளைகளில் தெருக்களில் வந்து விளையாடுவதை விட வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அங்கிருந்து பட்டம் பறக்க விட்டு தங்களது நேரத்தைக் கழிக்கின்றனர். இதையே பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது பொழுதுபோக்காக வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் சிலர் பெற்றோருக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்வது, மாடு மேய்ப்பது போன்ற வேலைகளிலும் ஜாலியாக ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த ஊருக்கு...

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் சில இடங்களுக்கு சென்று நண்பர்களை சந்திப்பது, ஒரு சில விளையாட்டுகளை விளையாடுவதையும் காண முடிகிறது. எந்த ஒரு நபரும் தங்கள் குடும்பத்தோடு சென்று உற்றார், உறவினர்களை சந்திப்பது, சொந்த ஊருக்கு செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை தற்போது நிலவுகிறது.

இதனால் பெரும்பாலான நேரங்களில் மாணவ, மாணவிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளன. அதிலும் மாணவர்கள் சிலர் தங்களது நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்