பொருளாதார வளர்ச்சிக்கான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்

பொருளாதார வளர்ச்சிக்கான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-05-09 22:59 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் தற்போது 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் வைரஸ் தொற்று நோயாளிகள் யாரும் இல்லாததால் அவை பச்சை மண்டலங்களாகி உள்ளன. நன்கு திடகாத்திர மானவர்களையும் வைரஸ் தாக்குகிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான அறிகுறி தெரிவதில்லை.

இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதாரத் துறை இணைச் செயலாளர், கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே இந்த வைரஸ் நாட்டைவிட்டு விரைவில் போகாது என்று தெரிகிறது. வயதான, நோயுள்ள 10 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக 90 சதவீத மக்கள் வேலையின்றி பாதிக்கப்படக்கூடாது. அவர்கள் பணி செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு அரசு உதவ தயார்

இதன் மூலம் வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பரவி வருவது தெரியவருகிறது. இப்போது பத்து நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரு மடங்காகிறது. எனவே நாம் பொருளாதாரத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மராட்டியத்தில் ரெயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது. வெளி மாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் புதுவை திரும்பவும், புதுவையில் உள்ள பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லவும் அரசு உதவி செய்ய தயாராக உள்ளது.

மத்திய அரசின் திட்டம் என்ன?

இதற்கிடையே பிரதமருக்கு கடிதம் ஒன்றை நான் எழுதியுள்ளேன். குறிப்பாக வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பாக சிவப்பு, பச்சை ஆரஞ்சு மண்டலங்கள் என்று பிரிப்பதை மத்திய அரசு செய்யக்கூடாது. ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் இப்போதைய நடைமுறைப்படி 5 ஆயிரம் குடும்பங்கள் முடக்கப்படுகின்றன. அதைவிடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் மற்றும் அருகில் இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளேன்.

மேலும் வருகிற 17-ந் தேதிக்கு பிறகு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. மத்திய அரசின் திட்டம் என்ன? மாநில அரசுகளுக்கு தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட கூட பணம் இல்லை. எனவே மத்திய அரசு நிதி கொடுத்து உதவிட வேண்டும் என்று கூறி உள்ளேன்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க நிபுணர் குழுவை அமைத்து, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அந்தக்குழு பரிந்துரை செய்யவேண்டும் என்று கூறியுள்ளேன். இப்போது பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் மாநில முதல்-மந்திரிகள் பேசத் தயங்குகிறார்கள்.

புதுவைக்கு மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியின் பங்கு, பழைய நிலுவைத் தொகைகள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். அதுமட்டுமின்றி புதுவை மாநிலம் வெளியில் வாங்கும் கடன் தொகையை அதிகரிக்க அனுமதி அளிக்கவும் கேட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்