புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் பேச வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் பேச வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-09 23:26 GMT
மும்பை, 

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வருமானமின்றி சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பலர் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர்.

பாரதீய ஜனதா ஆளும் உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்களை அந்த மாநில அரசுகள் அழைத்து செல்வதற்கு அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் மற்றும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.

பிரதமர் தலையிட வேண்டும்

இது தொடர்பாக சரத்பவார் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். புலம்பெயர்ந்த மக்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுமதிக்காத மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் பேச வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார். மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் என்று கூறினார். ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது பங்கிற்கு வெளிமாநில தொழிலாளர்களை ரெயிலில் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அவுரங்காத்தில் நடந்தே சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த களைப்பில் மத்திய பிரதேச தொழிலாளர்கள் 16 பேர் ஓய்வெடுப்பதற்காக தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது சரக்கு ரெயில் ஏறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்