வங்கி லோன் ஏஜெண்டை கடத்தி கொல்ல முயற்சி: பிரபல ரவுடி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓசூரில் வங்கி லோன் ஏஜெண்டை கடத்தி கொல்ல முயன்ற வழக்கில் கைதான பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 04:03 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன்சிப் ஜெ.பி.டிராங்கிள் லே அவுட்டை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவர் வங்கி லோன் ஏஜண்டாக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு, காரில் சென்றார்.

அப்போது, ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்ற ராதாகிருஷ்ணன் (47) மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் காரில் வினோத் காரை பின்தொடர்ந்து சென்று அவரை கடத்தி சென்றனர். அவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு அடித்து, உதைத்த கும்பல், வினோத்தின் செல்போனை பறித்து, இன்டர்நெட் பேங்கிங் மூலம், பண பரிவர்த்தனை ஏதும் நடந்துள்ளதா? என பார்த்தனர். அதில் பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல், வினோத்தை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது.

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அவர்களிடம் இருந்து தப்பிய வினோத் சிப்காட் போலீசில் புகார் செய்தார். இது குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான பத்தலப்பள்ளி மார்க்கெட் பகுதியில் உள்ள சபரி நகரை சேர்ந்த முரளிதரன் (22), தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னாமடம் காந்தி நகரை சேர்ந்த சாய்குமார் (23), தேன்கனிக்கோட்டை அடுத்த அரசகுப்பம் பகுதியை சேர்ந்த அருண் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணன் மீது, 50 லட்சம் ரூபாய் கேட்டு ஜான்பாஷா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு கொலை செய்த வழக்கு மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று சேலம் மத்திய சிறையில் வழங்கினார்.

மேலும் செய்திகள்