ஆரணி பகுதியில் ஊரடங்கு காரணமாக வெற்றிலை வியாபாரம் கடும் பாதிப்பு; 10 சதவீதம் கூட விற்பனையில்லை

கோவில் விழா, சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் வெற்றிலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 23:19 GMT
ஆரணி,

தமிழகத்தில் குறைந்த முதலீட்டில் சுய தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் பெட்டிக்கடையைத்தான் தொடங்குவார்கள். வெற்றிலை பாக்கு இந்த கடைகளில் தவறாது விற்பனையாகும். பிழைக்க வழியில்லாதவர்கள் வெற்றிலைபாக்கு கடையாவது வைத்து பிழைத்துக்கொள்வேன் என கூறுவார்கள். ஆனால் கொரோனாவால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வெற்றிலை பாக்கு கடைகளை கூட திறக்க முடியாமல் செய்து விட்டது.

ஆரணி நகரில் 25-க்கும் மேற்பட்ட வெற்றிலை வியாபாரிகள் உள்ளனர். இவர்களுக்கு ஆம்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெற்றிலைகள் விற்பனைக்கு வரும். இவற்றை பெட்டிக்கடைகளுக்கு அனுப்பியும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுகக்கு தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று மக்களிடையே பரவாமல் இருப்பதற்காக மத்திய அரசின் ஊரடங்கும், தமிழக அரசின் சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பித்து வரும் 17-ந் தேதிவரை அமுலில் உள்ளது.

இந்த நிலையில், கோவில்கள் முடப்பட்டன, திருவிழாக்கள் நடைபெறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது, திருமணங்கள் எளிய முறையில் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டதால் விழாவிற்கு முக்கிய தாம்பூலமாக விளங்குவது வெற்றிலை பாக்குதான். ஆம்பூரில் இருந்து சைக்கிளிலேயே சென்று வெற்றிலைகளை ஒருசில வியாபாரிகள் வாங்கி வருகின்றனர்.

அதுவும் விழாக்கள், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில்கூட மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரிகள் தினசரி பழுத்த வெற்றிலைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். வியாபாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 100 கவுளி வரை வியாபாரம் செய்தவர்கள் இன்று 10 கவுளிகூட விற்பனை செய்ய முடியவில்லை என புலம்புகின்றனர்.

அரசு பல்வேறு தரப்பு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குகிறார்கள். ஆனால் வெற்றிலை வியாபாரிகளான எங்களுக்கு தினசரி நஷ்டமே அடைந்து வருகிறோம். எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்