ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் செயல்படும் உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது.

Update: 2020-05-11 22:45 GMT
ஈரோடு, 

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டபோது இங்கு கடுமையான நெரிசல் இருந்தது. ஆனால் நாளடைவில் பொதுமக்கள் வருகை குறைந்தது. இதனால் விவசாயிகள் தாங்கள் அன்றாடம் கொண்டு வரும் பொருட்களைக்கூட முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் திரும்ப எடுத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.

மேலும், பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வருகிறார்கள். இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “முதலில் பெரியார் நகர், சம்பத் நகர் என்று 2 இடங்களில் உழவர் சந்தை கூடி வந்தது. இந்த 2 பகுதிகளும் நெரிசலான குடியிருப்புகள் என்பதால் தினமும் காலையில் நடை பயிற்சி செல்பவர்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்வார்கள். இதனால் விவசாயிகளுக்கு நிரந்தர விற்பனை இருக்கும். ஆனால் இப்போது சந்தை அமைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு அப்படி யாரும் வருவதில்லை. ஆங்காங்கே காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருவதால் விவசாயிகளின் வழக்கமான வாடிக்கையாளர்களும் வருவதில்லை. இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஈரோட்டில் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகளை சுத்தம் செய்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, உழவர் சந்தைகளை செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்”, என்றார்.

மேலும் செய்திகள்