கொரோனா தடுப்பு பணிகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Update: 2020-05-11 23:53 GMT
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனாவை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஆதரவு வழங்கி வருகிறது. ஆனால் இந்த 45 நாட்களில் இந்த அரசு செய்த சாதனைகள் பூஜ்ஜியம். ஊரடங்கு தளர்வு உள்பட அனைத்து விஷயங்களிலும் அரசு குழப்பத்துடன் செயல்படுகிறது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. வெளியூர் செல்ல விரும்புகிறவர்கள் பாஸ் பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்களை பஸ்களில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் சிக்கியுள்ள கன்னடர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்.

ரூ.50 ஆயிரம் கோடி

கொரோனா பாதிப்பு தொடர்பாக இதுவரை எத்தனை பேர் தனிமை முகாமில் வைக்கப்பட்டனர் என்ற பட்டியலை அரசு வெளியிட வேண்டும். பெட்ரோல்-டீசல் மீது 69 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கேர் நிதிக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதி எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். வெறும் தீபம் ஏற்றுவது, கைகளை தட்டுவது போன்றவற்றால் எந்த பயனும் இல்லை. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா அரசியல் செய்ய முயற்சி செய்கிறது.

இவ்வாறு வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்