10-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: பாதுகாப்பு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

10-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-12 22:20 GMT
அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஜெயபால் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான முருகன், அவரது உறவினர் கலியபெருமாள் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 10-ந் தேதியன்று ஜெயபாலுவும், அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் அவர்களது மகள் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அங்கு சென்ற முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் காலை ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து முருகன், கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மாணவி ஜெயஸ்ரீயின் உறவினர்கள், நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முருகன், கலியபெருமாள் ஆகியோரால் தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, இதனால் எங்கள் குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு வழங்குவதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்