கொரோனா வைரசால் போக்குவரத்து முடக்கம்: லாரிகளுக்கான 3 மாத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டு இருப்பதால் லாரிகளுக்கான 3 மாத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

Update: 2020-05-13 04:07 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் 45 நாட்களுக்கு மேலாக சுமார் 4 லட்சம் சரக்கு லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படாமல் வேலைவாய்ப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் லாரி உரிமையாளர்கள் நிதிநிறுவனங்களில் இருந்து வாங்கிய கடன்களுக்கு மாத தவணை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து உள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி இருப்பதும், அத்தியாவசிய பொருட்களை எடுத்து வரும் லாரிகளுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்காமல் சுங்க கட்டணம் வசூல் செய்வதும் முற்றிலும் லாரி உரிமையாளர்களை வஞ்சிக்கிற செயல் ஆகும்.

மணல் குவாரிகள்

இந்த சூழ்நிலையில் லாரி உரிமையாளர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாத காலாண்டு சாலைவரியை செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். எனவே சாலை வரியை ரத்து செய்து விலக்கு அளிக்க வேண்டும். கடந்த 11-ந் தேதி முதல் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவும், கட்டுமான பணிகளுக்கு தேவையான உபகரணங்களை லாரிகளில் எடுத்து செல்ல தடை இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

எனவே கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல் கிடைக்க அதிக எண்ணிக்கையிலான மணல் குவாரிகளை திறந்து இயக்கிட வேண்டும். செங்கல், மணல், ஜல்லி ஏற்றி செல்லும் லாரிகளுக்கு முறையாக அனுமதி சீட்டு வழங்க வேண்டும். கொரோனா நோய் பரவும் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்து லாரிகளை ஓட்டுகிற டிரைவர்களுக்கும், லாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்