தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

Update: 2020-05-13 22:00 GMT
தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது சாம்ராஜ்நகர் மாவட்டம். இங்குள்ள குண்டல்பேட்டை தாலுகா சவுதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமல்லப்பா. விவசாயி.

இவரது வீடு, தோட்டம் குண்டல்பேட்டை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தோட்டத்தில் அவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சிவமல்லப்பாவின் 3 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு கன்றுக்குட்டியை கடித்து காயப்படுத்தியது.

சிறுத்தையின் அட்டகாசத்தால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர். கடந்த 2 வாரங்களாக அந்த பகுதியில் இந்த சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்தது.

எனவே அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று சாம்ராஜ்நகர் மாவட்ட வனத்துறையினர் சிவமல்லப்பாவின் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். அதில் ஒரு ஆட்டையும் கட்டிப்போட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறதா? என கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் அங்கு சென்று கூண்டை பார்த்தனர். அப்போது கூண்டில் சிறுத்தை சிக்கியது தெரிய வந்தது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த சிறுத்தை பயங்கரமாக உறுமியது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி பந்திப்பூர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கூண்டை திறந்து விட்டதும் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றது.

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்