வாணியம்பாடியில் காய்கறி, பழங்களை தூக்கிவீசிய நகராட்சி கமிஷனர் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

வாணியம்பாடியில் காய் கறி மற்றும் பழங்களை நகராட்சி கமிஷனர் தூக்கி வீசினார். இதற்கு பதில் அளிக்குமாறு அவருக்கு மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2020-05-14 00:30 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கவும், தொழிற்சாலைகல் இயங்கவும் நேர கட்டுபாட்டுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் ஜீவாநகர், கோட்டை பகுதியில் கொரோனா தொற்று நோய் காரணமாக 2 பேர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களும் தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நகராட்சி பகுதிகளில் முழு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தற்போது நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நகரில் உள்ள வாரச்சந்தையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், சி.எல்.சாலை, மலங்கு சாலை, வாரச்சந்தை சாலை, கச்சேரி சாலை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி சில வியாபாரிகள் கடைகளை திறந்தும், தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் செய்ய தொடங்கினர்.

இதனையறிந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று கடைகளை மூடுமாறும், பழ வியாபாரிகளை கடைகளை அப்புறப்படுத்துமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை நடத்தி வந்தனர். இதனால் அவர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கடைகளை மூடி சீல் வைத்தும், அப்பகுதியில் விதிகளை மீறி சமூக இடைவெளி இன்றி மக்களை கூட்டி வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்த பழக்கடைகளை அப்புறப்படுத்தி, பழங்களை தூக்கி ரோட்டில் வீசினார்.

நகராட்சி கமிஷனரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர் நகராட்சி கமிஷனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிசில்தாமல் கூறுகையில், கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதாலும், கோயம்பேடு போன்ற சம்பவங்கள் வாணியம்பாடி பகுதியில் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் தீவிரமாக பணியாற்றி வந்தோம். வியாபாரிகளை கஷ்டப்படுத்துவது என் நோக்கம் இல்லை. என்னுடைய செயலால் வியாபாரிகளின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து நேற்று காலை வாணியம்பாடி துணை போலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் சிவபிரகாசம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோருடன் நகராட்சி கமிஷனர் சிசில்தாமஸ் சம்பந்தப்பட்ட பழ வியாபாரிகளின் கடைக்கு நேரில் சென்று அவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து, வருத்தம் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தனர்.

பின்னர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சாலையோர வியாபாரிகள் மற்றும் பழ வியாபாரிகள் ஊரடங்கு உத்தரவை மீறி இருந்தால் அவர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் நகராட்சி ஆணையாளர் அதிகார வரம்பையும், சட்ட வரம்பையும் மீறி செயல்பட்டுள்ளார். ஏழை பழ வியாபாரிகளிடம் அவர் நடந்து கொண்ட முறை மனித உரிமை மீறல் ஆகாதா?, இதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்