ஒடுகத்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஒடுகத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர்.

Update: 2020-05-13 23:30 GMT
அணைக்கட்டு, 

ஒடுகத்தூர் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.

மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்காததால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து வந்தனர். விவசாய கிணற்றிலும் தண்ணீர் வற்றிபோனதால். தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 11 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த அதிகாரியும் வராததால் ஆத்தரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அதற்குள் அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு 4 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கி வந்தனர். 4 ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. கூடுதலாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்தனர். இன்று வரை அந்த கிணற்றில் மோட்டார் அமைத்து குடிநீர் வழங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றனர்.

அதற்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயந்தி 2 நாளில் மோட்டார் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்