வடமாநில தொழிலாளர்கள் நடந்தே ஊருக்கு செல்ல முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்

என்.எல்.சி. புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் நடந்தே ஊருக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2020-05-14 22:36 GMT
நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் கொள்ளிருப்பு அருகே சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் உத்தரப்பிரதேசம், ஜார்க் கண்ட், கர்நாடகா, ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவின் காரணமாக புதிய அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களை ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த நிலையில் நேற்று காலையில் தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த வட மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன், வட்டம் 24 புனித காணிக்கை அன்னை ஆலயம் அருகே நடந்து சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெர்மல் லதா, டவுன்ஷிப் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தொழிலாளர்களை தடுத்த நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் என்.எல்.சி. மின்துறை இயக்குனர் ஜாஜிஜான் அங்கு வந்து வடமாநில தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ்குமார் செல்போன் மூலம் வடமாநில தொழிலாளர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊருக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதனை ஏற்று வட மாநில தொழிலாளர்கள் தங்களது தொழிலாளர் குடியிருப்புக்கு செல்ல ஒப்புக்கொண்டனர். நெய்வேலியில் வட மாநில தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு செல்ல புறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்