திருவெண்ணெய்நல்லூர் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு, கைதானவர்களின் உறவினர்கள் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கைதானவர்களின் உறவினர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-05-15 00:56 GMT
விழுப்புரம்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரையை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்துக்கொன்ற வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முருகன், கலியபெருமாள் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

போராட்டம்

இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தும்படியும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாணவி ஜெயஸ்ரீ எரிக்கப்பட்ட சம்பவம் நடந்தபோது கலியபெருமாள், தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அதுபோல் முருகன், கரும்பு வெட்டும் ஆட்களுடன் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டிருந்தார். இது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலருக்கும் தெரியும். இந்த சூழலில் மாணவி ஜெயஸ்ரீ கொடுத்த பொய்யான வாக்குமூலத்தின்படி முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று கூறினர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்