பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 2,184 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 2,184 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-05-14 22:45 GMT
பொள்ளாச்சி,

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையில் விருப்பமுள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதிகளில் தாலுகா வாரியாக சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் அரசு வெளியிட்டு உள்ள இணையதளத்தில் பதிவு செய்தனர். இதையடுத்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று அசாம், ஒடிசா மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை பஸ்சில் சென்றனர். சப்-கலெக்டர் வைத்திநாதன் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கினார். அப்போது தாசில்தார் தணிகவேல், துணை தாசில்தார் ஜெயசித்ரா, வருவாய் ஆய்வாளர்கள் பட்டுராஜ், வினோத், முத்து, கிராம நிர்வாக அலுவலர் தனராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் இருந்து சென்ற தொழிலாளர்களுக்கு தாசில்தார் ஸ்ரீதேவி உணவு, குடிநீர் வழங்கினார். அப்போது தலைமையிடத்து துணை தாசில்தார் ரேணுகாதேவி, மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து வடமாநில தொழிலாளர்கள் சுமார் 2,200 பேர் பதிவு செய்திருந்தனர். இதுவரைக்கும் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 1,300 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இன்று (நேற்று) அசாம் மாநிலத்தை சேர்ந்த 261 பேரும், ஒடிசாவை சேர்ந்த 205 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோன்று கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 1,435 தொழிலாளர்கள் பதிவு செய்து இருந்தனர். இதுவரைக்கும் 884 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில் இருந்து 2,184 பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்