சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைக்காரர்களுக்கு அபராதம் - பறக்கும் படையினர் அதிரடி

ஊட்டியில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து, பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-05-14 22:30 GMT
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவுரைப்படி நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, பிற பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கடைகளுக்கு முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் உரிய அடையாள குறியீடுகளை இடைவெளி விட்டு குறிக்க வேண்டும், பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கை கழுவுவதற்கு தண்ணீர், சோப்பு அல்லது கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

நீலகிரியில் செயல்பட்டு வரும் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பறக்கும் படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் உள்ளனர். அரசுத்துறையினருக்கு கொரோனா தடுப்பு பணிகள் இருப்பதால், அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் திறந்தவெளி சந்தைகள், முக்கிய இடங்களில் உள்ள கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நோய் தொற்றை பரப்பும் வகையில் கூட்டம் அதிகமாக இருப்பது, சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

கடைக்காரர் உள்பட பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் பறக்கும் படையினர் மணிக்கூண்டு, கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என நேரில் திடீரென சென்று ஆய்வு செய்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல் நின்றவர்களை, முகக்கவசம் அணியும்படி கூறினர். சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைக்காரர்களுக்கு உடனடியாக ரூ.500 அபராதம் விதித்து, அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஊட்டியில் கடைகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாதது தொடர்பாக இதுவரை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நேற்று குன்னூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்ததால், அவர்களை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பறக்கும் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பறக்கும் படையினர் அரசு உத்தரவை விளக்கி கூறிய பின்னர் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தி விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்