அனைத்து கடைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை

தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மஞ்சுநாதா கூறினார்.

Update: 2020-05-15 04:42 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சேலம் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரியின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மஞ்சுநாதா பேசும் போது கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலெக்டர் ராமன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக தங்கள் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை தக்க வைத்துக்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

கடும் நடவடிக்கை

கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வருபவர்களும், அங்கு பணிபுரிபவர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இது குறித்த விளம்பர பதாகைகளை கண்டிப்பாக வைக்க வேண்டும். மேலும் அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள் ஜோதி அரசன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்