1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது

காரையூர் அருகே 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

Update: 2020-05-15 04:46 GMT
காரையூர், 

காரையூர் அருகே 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள ஒலியமங்கலம், வெள்ளாளபட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாளபட்டி கவுண்டன் வயலில் 400 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் இதில் தொடர்புடைய வெள்ளாளபட்டியை சேர்ந்த பழனிச்சாமி, சுரக்காப்பட்டியை சேர்ந்த ராசு ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், ஒலியமங்கலம் செட்டிகுளம் வடகரையில் 1,000 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும் வேங்கம்பட்டி அழகு என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மணல் கடத்தியவர் கைது

*கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் நெடுங்குடி கைலாசநாதர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெடுங்குடி பாம்பாற்றில் இருந்து சரக்கு வேனில் மணல் கடத்தி வந்த ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 நாள் வேலை

*காரையூர் அருகே உள்ள அரசமலை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிவித்தும் பணியை மேற்கொண்டனர். மேலும் பணியாளர்கள் அடிக்கடி கை கழுவுவதற்கு ஏதுவாக தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் அறந்தாங்கி வாலிபர் தற்கொலை

*அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் செல்வக்குமார் (27). இவர் குவைத் நாட்டில் கடந்த 7 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வக்குமார் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

5 டீக்கடைகளுக்கு ‘சீல்’

*கறம்பக்குடி தாசில்தார் சேக்அப்துல்லா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா ஆகியோர் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம், திருவோணம் சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்ட 5 டீக்கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். ஜவுளிக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி பின் பற்றுதல், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

எலி மருந்து பறிமுதல்

*புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் கணேஷ்நகர் போலீசார் இணைந்து புதுக்கோட்டை பேராங்குளம், உசிலங்குளம், அசோக்நகர் உள்ளிட்ட 58 இடங்களில் மளிகை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் பொன்னமராவதியில் உள்ள மளிகை கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சோதனை செய்து, கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட எலி மருந்தை பறிமுதல் செய்தனர்.

சாராயம் விற்ற 2 பேர் கைது

*கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சிவன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் விற்ற குமரன் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (38), சிவன் கோவிலை சேர்ந்த கருப்பையா (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 3 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

*திருவரங்குளம் அடுத்துள்ள திருக்குளத்தில் 100 நாள் வேலை திட்ட பணி தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்