நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மனு; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்

வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் கொடுத்த மனுக்கள்மீது விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

Update: 2020-05-15 23:45 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், தமிழகஆந்திர எல்லை பகுதியான சிந்தகாமணிபெண்டா மலை கிரமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கும், வசதியற்ற மலைவாழ் மக்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கலெக்டர் சிவன்அருள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருவதால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகள் மூலமாகவும், ஊராட்சிகளிலும் சுய உதவி குழுக்கள் மூலம் கிராமங்கள் தோறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 8,000 அரசு அலுவலர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கபசுரக் குடிநீர் வழங்கி நோயைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சிசில்தாமஸ் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட பழ வியாபாரிகளும் மற்றும் வாணியம்பாடியில் உள்ள 15க்கும் மேற்பட்ட வணிகர்கள் கூட்டுமைப்பு சங்கம் சார்பாகவும் மனுக்களை அளித்துள்ளனர். இம்மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பேட்டியின் போது வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் தாமஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்