தொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

தொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2020-05-15 21:54 GMT
கடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று கடலூருக்கு வந்தார். அப்போது அவர், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தார். அவருடன் துரை.ரவிக்குமார் எம்.பி., கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிவாரணம் கிடைக்க நடவடிக்கை

100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் ஜூன், ஜூலை மாதங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அறிவிப்பு வந்தால் அதற்கு முன் தொழிற்பேட்டையை பரிசோதித்து ஆபத்தில்லாமல் இயங்குமா? என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் சான்று பெற வேண்டும். அந்த சான்று வந்த பின்னரே தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற மேம்பாட்டு தொகுதி நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளை தொடங்க உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.

கனவு திட்டம்

மத்திய அரசிடம் நிதி இருக்கிறதா?, இல்லையா? என்பது கேள்வி அல்ல. ஆட்சி நிர்வாகத்தில் உள்ள பிரதமர் மோடி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள கடமைப்பட்டுள்ளார். அந்த வகையில் இப்போது நெருக்கடியில் உடனடியாக பாதிக்கப்படும் மக்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நேரடியாக நிவாரணம் கிடைக்கக்கூடிய வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

இப்போது அறிவித்துள்ள ஆத்மா நிர்மா பாரதற்சார்பு பொருளாதார திட்டம் கனவு திட்டமாகத்தான் தெரிகிறது. பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கக் கூடிய திட்டம் எதுவும் இல்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் திருமாவளவன் மட்டுமே கண்டிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது எந்த வகையிலான மனநிலை. தி.மு.க.வினரின் செயல்பாட்டினை நியாயப்படுத்தவில்லை. எனினும் ஏன் மற்றவர்கள் கண்டிக்கவில்லை என்பதே எனது கேள்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்