குடிநீர் வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-15 23:00 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் மற்றும் பைப்புகள் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த பல தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி தட்டப்பாறை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜபத்திரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சக்கரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பழுதடைந்த மோட்டார் மற்றும் பைப்புகளை உடனடியாக சீர் செய்துதர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குடியாத்தம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வசதி இருந்தும் மோட்டர் ரிப்பேர் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் உடனடி நடவடிக்கை இல்லாத காரணத்தாலேயே தடை உத்தரவு காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடவேண்டி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், பைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்