சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா - துணை கமிஷனர் அலுவலகத்தில் 2 பேருக்கு தொற்று

சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். துணை கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-05-15 22:45 GMT
சென்னை, 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா போலீஸ் துறையையும் விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு பணி செய்யும் போலீசார் கொரோனா தொற்றால் தினமும் அல்லல்படுகிறார்கள்.

சென்னை போலீசில் நேற்று 10 பேர் தாக்கப்பட்டனர். கோயம்பேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீஸ் ஏட்டு, ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் 2 காவலர்கள் பாதிப்பில் சிக்கி உள்ளனர்.

துணை கமிஷனர் அலுவலகத்தில்....

தியாகராயநகர் துணை கமிஷனர் ஏற்கனவே தாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் மற்றும் அவரது கார் டிரைவர் பாதிப்புக்கு உள்ளானார். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் காவல் பணி செய்த ஆவடி சிறப்பு காவல்படை காவலர்கள் 3 பேரும் பாதிப்படைந்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சென்னை போலீசில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டி 200-ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

தாம்பரம் அடுத்த செம்பாக்கம், நவநீதன் நகர், 1-வது தெருவில் ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதேபோல் கவுரிவாக்கத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் கோயம்பேடுக்கு காய்கறி ஏற்ற சென்று வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவரது மகள் வேலை பார்த்த மருந்தக சக பெண் ஊழியருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் சிட்லபாக்கத்தில் 18 வயது இளம்பெண், பெருங்களத்தூரில் 53 வயது பெண் மற்றும் 61 வயது முதியவர் ஒருவருக்கும், நாகல்கேணி காந்திநகரில் 27 வயது பெண், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

போலீசாருக்கு கொரோனா

ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 51 வயது ரெயில்வே ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் உள்ள பெற்றோரை பார்க்கச்சென்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. அதேபோல் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சுமார் 64 வயது முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோல் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 3 பேருக்கும், திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகர் பகுதியில் 63 வயது முதியவர் மற்றும் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி, திருமுல்லைவாயல் பாரதி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 28 வயது மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் செய்திகள்