வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-05-16 04:35 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன். நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா. இவரது செல்போனுக்கு திடீரென அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மீனாவின் வங்கி கணக்கிற்கான ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டது. அதனால் அந்த கார்டை புதுப்பிக்க வேண்டும். உங்களது ஏ.டி.எம்.மில் உள்ள வரிசை எண்ணை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய மீனா, தனது ஏ.டி.எம். கார்டின் எண்களை தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து எதிர்முனையில் பேசியவர் தனது அழைப்பை துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு வரிசையாக குறுஞ்செய்தி வந்தது. அதை படித்து பார்த்த போது, மீனாவின் வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி நகைபட்டறையில் இருந்த தனது கணவர் நாகநாதனுக்கு விஷயத்தை தெரிவித்தார்.

புகார்

பின்னர் கணவன்-மனைவி இருவரும் உடனடியாக தங்களது கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று சம்பவத்தை தெரிவித்தனர். அப்போது அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் நாகநாதன், அவரது மனைவி மீனா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார்.

இந்த சம்பவம் பனைக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்