கர்நாடகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில்

கர்நாடகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து தெரிவித் துள்ளார்.

Update: 2020-05-16 23:35 GMT
பெங்களூரு, 

நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. மதுவிலக்கு அமல் படுத்தினால், போலி மதுபானங்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இந்த போலி மதுபான நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடினமான சட்டத்தை இயற்ற அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு மடாதிபதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அரசு கடினமான சட்டத்தை அமல்படுத்தும். 18-ந் தேதி (அதாவது நாளை) முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலை உள்ளது. ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

பணிகள் முடங்கியுள்ளன

கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து இறுதி முடிவை அரசே எடுக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. கர்நாடகத்தில் இந்த வைரஸ் தொற்று பரவல் சற்று கட்டுக்குள் உள்ளது. இதை முழுமையாக கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்