கொரோனா தொற்று அவமானப்படும் விஷயம் இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி

கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.

Update: 2020-05-17 02:32 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு சிறப்பு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக் காலில் ஏற்கனவே ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் துபாயில் இருந்து காரைக்காலுக்கு கடந்த 9-ம் தேதி திரும்பிய 24 வயது பெண், தனக்கு விமான நிலையத்தில் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் நாங்கள் அவரை பரிசோதனை செய்தோம். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. இதையடுத்து அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் காரைக்காலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. எனவே புதுச்சேரியில் 6, காரைக்காலில் 2 மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 5 பேர் என மொத்தமாக 13 பேர் புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்-அமைச்சர் முடிவு

புதுவையில் ஓரிரு தினங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. அப்போதும் மக்கள் சமூக விலகல், முககவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகியவை மிக முக்கியம். இவைகள் கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள உதவும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனாவிற்கான கட்டுப்பாட்டு பகுதிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில முதல்-மந்திரிகளிடம் விட வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு பெற்றுள்ளார். இதனால் தற்போது முதல்-அமைச்சர் தலைமையில் உள்ள பேரிடர் மேலாண்மையே எவ்வளவு பகுதிகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

அவமானப்பட ஏதும் இல்லை

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக விலகல் அவசியம் என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறையை அமல்படுத்த உள்ளோம். ஏற்கனவே மகளிர் மருத்துவமனையில் செயல்படுத்தி வருகின்றோம். கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு முன்பு எங்கு சென்று வந்தோம் என்பது போன்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்கும் முழு விவரத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தொற்றுக்கு ஆளாவதை விரைந்து தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்