அரசு விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை அமைச்சர் தங்கமணி பேட்டி

அரசு விதிமுறைகளை மீறும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2020-05-17 03:31 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசு திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களிடம் விளக்கி கூறினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோமசுந்தரம், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

13 குடிமராமத்து பணிகள்

கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து, விசைத்தறிகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அரசின் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு விதிமுறைகளை மீறும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக தற்போது உள்ளது. இதேநிலை தொடர தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய சில கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது கோடைகாலம் என்பதால் ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதோ? அங்கு உடனடியாக ஆய்வு செய்து தண்ணீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். ஆற்று நீர் கிடைக்காத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் 13 குடிமராமத்து பணிகள் தொடங்க உள்ளன.

காலக்கெடு

ஊரடங்கு நேரத்தில் எந்த தொழிற்சாலையும் செயல்படாத காரணத்தினால் மின்தேவை குறைந்துள்ளது. அவர்கள் ஏற்கனவே மார்ச் மாதத்திற்கு உண்டான தொகையை செலுத்தி உள்ளனர். செலுத்தாதவர்கள் வருகிற 22-ந் தேதி வரை அபராத தொகை இல்லாமல் கட்டுவதற்கு காலக்கெடு அளித்துள்ளோம். ஊரடங்கிற்கான தளர்வு குறித்த அறிவிப்பு வந்தபிறகு, அதற்கு தகுந்தாற்போல் மின் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அரசே அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை கொடுத்துள்ளது. ஆனால் தி.மு.க.வினர் அவர்களின் இயக்கத்தை வைத்து அரசியல் செய்வதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். 

மேலும் செய்திகள்