சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பீகார் தொழிலாளர்கள்

சேலத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்த பீகார் மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Update: 2020-05-17 04:02 GMT
சேலம்,

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேலம் சூரமங்கலம், சேலத்தாம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், வெள்ளிப்பட்டறைகள், மர அரவை ஆலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் பீகார் தொழிலாளர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சேலத்திலேயே தங்கியுள்ளனர். இவர்களுக்கு வேலை கொடுத்த நிறுவனங்கள் தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதால் அன்றாட செலவுக்கு பணமில்லாமலும், உணவுக்கு வழியில்லாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

முற்றுகையிட முயற்சி

இதனிடையே, சேலத்தில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது பற்றி அறிந்த பீகார் மாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,, ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாததால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் உள்ளோம். எனவே எங்கள் சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சேலம் டவுன் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் இதுபற்றி கலெக்டரிடம் தெரிவித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பீகார் மாநில தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்