தஞ்சையில், தடையை மீறி குளிர்சாதன வசதியுடன் இயங்கிய சூப்பர் மார்க்கெட்டிற்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சையில் தடை உத்தரவை மீறி அதிக பணியாளர்களை கொண்டு குளிர்சாதன வசதியுடன் இயங்கிய சூப்பர் மார்க்கெட்டிற்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2020-05-17 17:08 GMT
தஞ்சாவூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம் எனவும் அரசு அறிவித்தது. கடந்த 11-ந் தேதி முதல் 34 வகையான கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதித்தது.

இதில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஷாப்பிங் மால் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளை திறக்க தடை விலக்கப்படவில்லை. அதையும் மீறி செயல்படும் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து வருகிறார்கள். அதன்படி தஞ்சையில் நிதி நிறுவனம், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தஞ்சை சீனிவாசம் பிள்ளை சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன வசதியுடனும், அதிக பணியாளர் களைக்கொண்டும் இயங்குவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சூப்பர் மார்க்கெட், தடை உத்தரவை மீறி குளிர்சாதன வசதியுடன் அதிக பணியாளர்களை கொண்டு இயங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த பணியாளர்களை அதிகாரிகள் வெளியே செல்லுமாறு கூறினர். அதன் பேரில் பணியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட்டை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்