சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதால் தொழில்கள் வளர்ச்சி அடையும்

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி அடையும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

Update: 2020-05-18 01:47 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜ கிருபாகரன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறப்பு பொருளாதார மண்டலம்

கடலூர் மாவட்டத்தில் 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 336 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 87 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்தில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ரூ.100 கோடி வர்த்தகம் செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வருகிற அக்டோபர் மாதம் கடைசி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முன்பு ஒரு பொருள் தான் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது பல பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி அளித்திருப்பது தொழில் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடையும், அனைத்து தொழில் நிறுவனங்களும் பாதுகாக்கப்படும். தொழில் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்