சேலத்தில் இறைச்சி விற்ற தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’

சேலத்தில் இறைச்சி விற்ற தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

Update: 2020-05-18 03:49 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் தடை உத்தரவை மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறந்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாதகாப்பட்டி, குகை, சிவசக்தி நகர் லைன் ரோடு, நெத்திமேடு பகுதிகளில் ஆய்வு செய்தபோது, தடை உத்தரவை மீறி 6 இறைச்சி கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். மேலும் அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 13 கிலோ ஆட்டிறைச்சி, 20 கிலோ கோழி இறைச்சி, 75 கிலோ மீன் என மொத்தம் 108 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 6 கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு ‘சீல்‘

இதனிடையே சேலம் தாதகாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் பிசியோதெரபி மற்றும் பல் மருத்துவமனையில் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் ஆனந்த் குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தடை உத்தரவை மீறி கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த இறைச்சிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்