ஈரோட்டில் கொரோனா பரவ காரணமான மேலும் 4 பேர் கைது

ஈரோட்டில் கொரோனா தொற்று பரவ காரணமான தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-05-18 04:48 GMT
ஈரோடு,

தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்ததாக ஈரோட்டில் கொரோனா அதிகமாக பரவியது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளில் தங்கினார்கள். இதில் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் 6 பேர் மீது கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே தாய்லாந்து நாட்டினருடன் உதவியாக இருந்த சிலருக்கும் கொரோனா வைரஸ் பரவியது. அவர்களும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக மேலும் 4 பேரை சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு கந்தசாமி வீதியை சேர்ந்த முகமது இஷ்பஹானி (வயது 68), கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்ரோடு ராமநாதன் வீதியை சேர்ந்த சாதிக்பாஷா (47), ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்த சாகுல்அமீது (40), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாராஜாபுரம் முஸ்லிம்தெருவை சேர்ந்த மைதீன் அப்துல்காதர் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முகமது இஷ்பஹானி மஞ்சள் வியாபாரியாகவும், சாகுல்அமீது கொடுமுடியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராகவும் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்