வெம்பாக்கம் அருகே, டாஸ்மாக் கடையை வீடியோ எடுத்ததில் அண்ணன், தம்பிக்கு அடி-உதை - போலீஸ் குவிப்பு

வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை வீடியோ எடுத்த தகராறில் அண்ணன்- தம்பிக்கு அடிஉதை விழுந்தது. செல்போனையும் பறித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-17 22:00 GMT
செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மேனலூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று காலை முதல் மதுவிற்பனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கடை மூடப்படும் நேரத்தில் பலர் மதுவாங்க நின்றிருந்தனர். அவர்களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டது.

அப்போது சுருட்டல் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருடைய மகன் ஜெய்சங்கர் (வயது30) என்பவர் தனது செல்போனில் மதுக்கடையை வீடியோ எடுத்துள்ளார். இதைபார்த்து அங்கிருந்தவர்கள் ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டு அவரை அடித்து உதைத்து அவருடைய செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் ஊருக்கு சென்று அவருடைய அண்ணன் மோகன்ராஜ் என்பவரை அழைத்துவந்துள்ளார். அவர் வந்து தம்பியின் செல்போனை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஜெய்சங்கர், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் தாக்கி உள்ளனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரம், குணசேகரன், சரவணக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று காயமடைந்த இருவரையும் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்