ஜெயங்கொண்டம் பஸ் நிலைய விரிவாக்க பணி: சைக்கிள் நிறுத்தும் இடத்தின் கொட்டகையை அகற்றியதால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் பஸ் நிலைய விரிவாக்க பணியின்போது சைக்கிள் நிறுத்தும் இடத்தின் கொட்டகையை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-18 15:56 GMT
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது பாழடைந்து அவ்வப்போது சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்து வந்தது. இதனால் 5 நபர்களுக்கு மேல் சிமெண்டு காரைகள் பெயர்ந்து தலை, கை, கால்களில் விழுந்து அடிபட்ட சம்பவங்களும் நடந்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியும் உள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்து நகராட்சியினர் அதனை அவ்வப்போது சீரமைத்து சிமெண்டு பூச்சு போட்டு பூசி வந்தனர். இந்த நிலையில் தற்போது புதிய பஸ் நிலைய கட்டிடத்தின் கட்டுமான பணி பழைய பஸ் நிலையம் அருகிலேயே விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நகராட்சி மண்டல அலுவலர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். 

இதனால் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்காக அருகில் இடையூறாக இருந்த சைக்கிள் நிறுத்தும் இடத்தினை (சைக்கிள் ஸ்டாண்டு) காலி செய்ய சொல்லி ஒப்பந்ததாரருக்கு 3 முறை நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கால அவகாசம் கொடுத்து சைக்கிள் நிறுத்தும் இடத்தை காலி செய்து தர அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் ஒப்பந்ததாரர் இடத்தினை காலி செய்யாததால் திடீரென நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் வசந்த், நகராட்சி பொது பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் குமாரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சைக்கிள் நிறுத்தும் இடத்தின் கொட்டகையை அகற்ற முடிவு செய்து நேற்று அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்