கடலூர் மாவட்டம் ; 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின

கடலூர் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின.

Update: 2020-05-19 04:43 GMT
கடலூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று அரசு அறிவித்தது. இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் 33 சதவீத ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் 18-ந்தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக கொண்டு செயல்பட வேண்டும். இதன்படி ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களை கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கின, கடலூர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், ஒன்றிய, நகராட்சி அலுவலகங்கள், வணிக வரி, வருமான வரித்துறை, வேளாண்மை துறை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், வங்கிகள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்து, தங்கள் பணிகளை செய்தனர்.

சுழற்சி முறையில் வேலை பார்த்து விட்டு வீட்டில் இருந்தாலும், அந்த ஊழியரை உயர் அதிகாரிகள் அழைத்தால் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்