பலத்த கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி மாடு சாவு

பலத்த கடல் சீற்றம் ஏற்பட்ட போது கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடு ராட்சத அலையில் சிக்கி கடலில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தது.

Update: 2020-05-19 23:15 GMT
மாமல்லபுரம், 

வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகி இருப்பதால் மாமல்லபுரத்தில் நேற்று 3-வது நாளாக பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று ராட்சத அலைகள் கரைப்பகுதி வரை 20 மீட்டர் தூரத்துக்கு சீறி எழும்பி வந்தன. நேற்று காலை கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடு ராட்சத அலையில் சிக்கி கடலில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தது. சிறிது நேரத்தில் அந்த மாடு கரை ஒதுங்கியது. இறந்து கிடக்கும் மாடு இன்னும் அகற்றப்படாததால் கடற்கரை பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனை அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் அதிவேக காற்று மற்றும் ராட்சத அலையில் 10 மீட்டர் தூரத்திற்கு கரைப்பகுதியை நோக்கி தூக்கி வீசப்பட்டன.

பிறகு மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு மற்றும் அடிக்கடி கடல் சீற்றம், புயல் போன்ற பேரிடரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு தமிழக அரசு முறையான நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று மாமல்லபுரம் மீனவர் பகுதி முன்னாள் கவுன்சிலர் சுரேந்தர் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடுத்து மீன்வளத்துறைக்கு மனு அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்