புதுவையில் மதுக்கடைகளை திறக்க கவர்னரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம்

கவர்னர் கிரண்பெடி அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-19 22:33 GMT
புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறப்பது என முடிவு செய்து அதற்கான ஒப்புதலுக்காக கவர்னர் கிரண்பெடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு காலங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு புதுவை மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள், சாராயக்கடைகள் அனைத்திற்கும் கலால் துறை சார்பில் ‘சீல்’ வைக்கப்பட்டது. அதனை அகற்றினால் தான் கடைகளை மீண்டும் திறக்க முடியும். மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான அரசாணை உடனடியாக வெளியிடப்படும்.

புதுவை அமைச்சரவை அனுப்பி வைத்த கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு வரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் புதுச்சேரி அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. வழக்கமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நாள்தோறும் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தெரிவிப்பார். ஆனால் அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.

கவர்னரின் அனுமதி கிடைக்காததால் புதுவையில் மதுபான கடைகளை இன்று (புதன்கிழமை) திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மதுக்கடைகள் திறப்பது தள்ளிப்போகிறது.

இதையடுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதியம் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் மாலை 4 மணிவரை நீடித்தது. பின்னர் இரவில் அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

புதுவை மாநிலத்தில் மது கடைகளை திறப்பதில் சிக்கல் நீடித்து வருவது மது பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்