சூறைக்காற்றால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகள் கவலை

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-05-20 02:30 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு உரமிட்டு, களைகள் எடுத்து பராமரித்து வந்தனர். அவை செழித்து வளர்ந்து தற்போது கதிர் விடும் தருவாயில் இருந்தது. பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்ததால், இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் மூங்கில் துறைப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமார் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே குறைக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்