டெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் இருந்து திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 172 பேர் சிவகாசி அருகே உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-05-20 05:32 GMT
சிவகாசி, 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழில் செய்து வந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். பின்னர் அவர்கள் தமிழகம் திரும்ப அரசு எடுத்த நடவடிக்கையால் டெல்லியில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயிலில் தமிழகம் வந்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் விருதுநகர் வந்தடைந்தனர்.

கல்லூரியில் முகாம்

பின்னர் அங்கிருந்து அவர்களை சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ஆமத்தூர் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முகாம் அமைத்து தனிமைப்படுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அந்த பாலிடெக்னிக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை தாசில்தார் வெங்கடேசன் செய்து கொடுத்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை

ஆமத்தூர் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் டெல்லியில் இருந்து வந்தவர்களுக்கு டாக்டர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் தெரிந்த பின்னர் அனைவரையும் அவரவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்