ஊரடங்கால் தங்கும் விடுதிகள் மூடல்: வருமானம் இன்றி தவிக்கும் ஊழியர்கள்

கொரோனா ஊரடங்கால் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளதால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

Update: 2020-05-20 23:15 GMT
கோவில்பட்டி,

பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். அனைத்து மதங்களிலும், கலாசாரத்திலும் விருந்தோம்பல் உயரிய பண்பாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. உலக பொதுமறையாம் திருக்குறளில் விருந்தோம்பல் குறித்து திருவள்ளுவர் 10 குறட்பாக்களில் எடுத்துரைத்துள்ளார். தன்னை நம்பி வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடனும், கனிவுடனும் வரவேற்று உபசரிப்பது குறித்து சங்க இலக்கியங்களில் எண்ணற்ற மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுலா துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்கள், பாரம்பரிய சின்னங்கள், கலைகள், கோடைவாசஸ்தலங்கள், சரணாலயங்கள், அருவிகள் போன்றவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு வியக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் விருந்தினர்களின் மனம் மகிழும் வண்ணம் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. விடுதிகளில் பல்வேறு விழாக்களை நடத்தவும் கண்கவர் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் தரமான உணவு தயாரித்து பரிமாறுவதற்காகவும், தங்கும் விடுதிகளை சுத்தமாக பராமரிப்பதற்காகவும் ஏராளமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றிய பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைவாய்ப்பு இழந்து போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனினும் பெரும்பாலான தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் ஊரடங்கிலும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் விருந்தினர்களால் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்போடு இருந்த தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் தற்போது ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. பெரும்பாலும் தங்கும் விடுதிகளுடன் இணைந்தே ஓட்டல்களும் நடத்தப்பட்டது. தற்போது ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே வழங்க அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் சிறிய ஓட்டல்களில் மட்டுமே பார்சல் உணவு வழங்கப்படுகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. இதனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் போதிய வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர்.

இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த தங்கும் விடுதி நிர்வாகி ராகேஷ் அங்குமுத்து கூறியதாவது:-

கோவில்பட்டியில் சுமார் 20 தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு 30 அறைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட விடுதிகளும் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள், நூற்பாலைகள், பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் கொள்முதல் செய்வதற்காக, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் அதிபர்கள் தங்குவதற்காக ஏராளமான விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது ஊரடங்கால் அனைத்து விடுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. எனினும் விடுதிகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கி வருகிறோம்.

பெரும்பாலானவர்கள் வங்கிகளில் கடன் பெற்றே தங்கும் விடுதிகள், ஓட்டல்களை கட்டி நடத்தி வருகின்றனர். எனவே, வங்கி கடன் தவணைத்தொகையை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட 3 மாத காலஅவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும். மேலும், ஊரடங்கில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்படாத நிலையிலும், கடந்த மாத மின்கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மின்வாரியத்தினர் கூறுகின்றனர். எனவே, ஊரடங்கு காலத்தில் மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். கோவில்பட்டி நகரசபை நிர்வாகம் சார்பில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் தீர்வை கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்