ஊரடங்கில் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி சிறப்பு விமானம் - 210 பேர் பயணம்

ஊரடங்கால் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இதில் 210 பேர் பயணம் செய்தனர்.

Update: 2020-05-20 23:45 GMT
ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவைகளும் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா மற்றும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்து தங்கி இருந்த வெளிநாட்டு பயணிகள் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளை திரும்ப அழைத்துச்செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது. தமிழகத்தில் மேலும் தங்கி உள்ள வெளிநாட்டு நாட்டு பயணிகளையும் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இருந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்களுக்காக சென்னையில் இருந்து சிட்னி நகருக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. சென்னைஆஸ்திரேலியா இடையே நேரடி விமான சேவை கிடையாது.

ஆனால் ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா நாட்டு பயணிகளை அழைத்துச்செல்வதற்காக முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பெரிய ரக சிறப்பு விமானம் சென்னை வந்தது. அந்த சிறப்பு விமானத்தில் சென்னையில் இருந்து 70 குழந்தைகள், 78 பெண்கள் உள்பட 210 பேர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்