கொரோனா ஊரடங்கால் மும்பையில் முடங்கிய சாலையோர உணவு வியாபாரம்

கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் சாலையோர உணவு வியாபாரம் முடங்கியுள்ளது.

Update: 2020-05-20 23:45 GMT
மும்பை,

பரபரப்பும், இரைச்சலும், அவசர சூழலும் தான் மும்பையின் அடையாளம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவை அனைத்தையும் பறிகொடுத்து அடங்கி கிடக்கிறது இந்த பெருநகரம். மும்பையின் இரைச்சலில் முக்கிய பங்கு வகிப்பது சாலையோர உணவு வியாபார கடைகள்.

மாலை 3 மணிக்கு பின்னர் சாலையோர உணவுகளின் சொர்க்கபூமியாக திகழும் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகள் களை கட்டிவிடும். பாவ் பஜ்ஜி, பானி பூரி, பேல் பூரி, தகி பூரி, சேவ் பூரி, வடபாவ், சாண்ட்விச், சமோசா, வறுகடலை ஆகியவற்றை மும்பைவாசிகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மும்பைவாசிகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட சாலையோர உணவு வியாபாரம் கொரோனா தாக்கத்தால் அடியோடு முடங்கி கிடக்கிறது.

ஊரடங்கால் வருமானத்தை இழந்து தவித்த சாலையோர உணவு வியாபாரிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

மும்பையில் இந்த வியாபாரத்தை நம்பியிருக்கும் மற்றவர்களோ, ஊரடங்கு முடிந்து வியாபாரம் தொடங்கும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

அதேபோல ஒவ்வொரு நாளும் நாவுக்கு சுவையாக இந்த உணவுகளை சுவைத்து மகிழ்ந்த மும்பைவாசிகளும் அந்த உணவுகளுக்காக ஏங்கி கிடக்கின்றனர்.

தென்மும்பை சவேரி பஜாரில் பானி பூரி கடை நடத்தி வந்த ஒருவர் கூறியதாவது:-

மார்ச் மாத நடுப்பகுதியில் மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்களை மூட அரசாங்கம் உத்தரவிட்ட போதே நான் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகில் உள்ள எனது சொந்த கிராமத்துக்கு வந்து விட்டேன்.

இங்குள்ள எனது விளைநிலத்தில் கோதுமை, கரும்பு மற்றும் நெல் பயிரிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் மும்பை திரும்பி வருவீர்களா என கேட்டதற்கு, நிலைமை எப்படி இருக்கும் என்பதை பார்த்து முடிவு செய்வேன் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்